யாழ்ப்பாணம், திருநெல்வேலி முருகன் வீதிப் பகுதியில் ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்கள் புதிய தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர்கள் வீதியில் வயர்களைப் போட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளீர்கள்" எனக் கூறி ஆரம்பமான இந்த முரண்பாடு, ஒரு கட்டத்தில் வாள்வெட்டுத் தாக்குதலாக மாறியுள்ளது.
குறித்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த வாளால் ஊழியர்களைத் தாக்கியதில், ஒரு ஊழியர் பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த ஊழியர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கோப்பாய் பொலிஸார், விரைந்து செயற்பட்டுத் தாக்குதலை நடத்திய இளைஞரைக் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக