வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஈரானிடமிருந்து கிடைத்த "மதிப்புமிக்க பரிசு" குறித்த இரகசியத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடைத்துள்ளார். பேச்சுவார்த்தைகளில் ஈரானின் நல்நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஹோர்முஸ் நீரிணையைத் தடையின்றி கடக்க 8 பாரிய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாகவும், இறுதியில் அது 10 கப்பல்களாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய சில கப்பல்களும் அடங்கும். ஈரான் தரப்பில் நடந்த ஒரு தவறுக்காக மன்னிப்புக் கோரும் விதமாகவே மேலதிகமாக 2 கப்பல்கள் அனுமதிக்கப்பட்டதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய போர்ச்சார்ந்த கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் தடுத்து வரும் நிலையில், "போர்வாதமற்ற" (Non-belligerent) கப்பல்களை மட்டும் கடக்க அனுமதித்து வருகின்றது. இந்தச் சூழலில், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடப்பதற்கு ஈரான் கட்டணம் வசூலித்து வருவதாக வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் (GCC) ஜஸிம் மொஹமேட் அல்-புடைவி தெரிவித்துள்ளார். இந்தப் பதற்றமான சூழலால் எண்ணெய் விலை உயரும் மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தனக்குத் தெரிந்தவரை அத்தகைய பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் எக்காரணம் கொண்டும் இந்தச் சலுகையைப் பெறாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக