உலகப் பொருளாதாரம் பாரிய அளவில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவர் நிறுவனம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ் பிரோல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து அவர் கடுமையான கவலை வெளியிட்டுள்ளதுடன், இந்நிலைமை 1970களில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியையும், 2022ஆம் ஆண்டு ரஷ்யா–உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தையும் ஒத்ததாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலை இரண்டு எண்ணெய் நெருக்கடிகளும், ஒரு எரிவாயு சரிவும் ஒன்றாக இணைந்தது போன்ற கடுமையான நிலையாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் உலக பொருளாதாரம் மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடி இதேபோல் நீடித்தால் எந்த நாடும் இதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ள அவர், இந்த பிரச்சினைக்கு உலகளாவிய அளவில் கூட்டு முயற்சி அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய யுத்த சூழ்நிலைகளால் சம்பந்தப்பட்ட பிராந்தியங்களில் குறைந்தது 40 எரிசக்தி வளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், தேவையான சூழ்நிலையில் கையிருப்பில் உள்ள எண்ணெயை வெளியிட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து, உறுப்புநாடுகளுடன் இணைந்து தேவையான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில் உறுப்புநாடுகள் தமது மூலோபாய கையிருப்பிலிருந்து 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிட ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக