மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மூன்று பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள அதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானை (Tehran) இலக்கு வைத்தும் புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தற்காப்பு மற்றும் இடைமறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, ஈரானில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட மிகக்கோரமான தாக்குதலில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவிகள் எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு நடத்திய முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம், லெபனானுக்குள் தரைப்படை ஊடுருவலை மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய படைகளுடன், ஹிஸ்புல்லா போராளிகள் தெற்கு லெபனானில் மிகக் கடுமையான நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் தங்களுக்குப் பங்கேற்கும் திட்டம் இல்லையென ஜெர்மனியும், ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க மேலதிகப் படைகளை அனுப்ப விருப்பமில்லை என ஐரோப்பிய ஒன்றியமும் (EU) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக