ஈரானின் புதிய தலைமை மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக, போர் முனையிலிருந்து கௌரவமான முறையில் வெளியேறுவது குறித்து வொஷிங்டன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அல் ஜசீரா (Al Jazeera) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதல் இன்னும் 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என அமெரிக்க தேசிய பொருளாதாரப் பேரவையின் பணிப்பாளர் கெவின் ஹார்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப், போர் திட்டமிட்ட கால அட்டவணையை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், விரைவில் எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதற்கு மாறாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைப்பதன் மூலம் உலகளாவிய பணவீக்கத்தை உண்டாக்கி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதே ஈரானின் உத்தியாக உள்ளது. இதனிடையே, "அமெரிக்காவை மீண்டும் ஒரு வெளிநாட்டுப் போரில் ஈடுபடுத்த மாட்டேன்" என்ற தனது தேர்தல் வாக்குறுதியை ஜனாதிபதி ட்ரம்ப் மீறியுள்ளதாக அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. போர் நீண்டகாலம் நீடித்தால், அது நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, "வெற்றியை அறிவித்துவிட்டு போரிலிருந்து வெளியேறுவதே" (Declare victory and get out) அரசியல் ரீதியாகச் சிறந்தது என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக