இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நீண்டகாலம் தொடருமானால், அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் புதிய தலைமையும் அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதார அழுத்தங்களையும் கருத்தில் கொண்டு, “கௌரவமான வெளியேற்ற வழி” குறித்து வொஷிங்டன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல் ஜசீரா வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வில், இந்த மோதல் நீடித்தால் அமெரிக்கா போரிலிருந்து பின்வாங்கி பேச்சுவார்த்தை வழியைத் தேர்வு செய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பொருளாதார பேரவையின் பணிப்பாளர் கெவின் ஹார்ட், இந்த மோதல் 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். அதேவேளை, போர் திட்டமிட்டதை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், விரைவில் எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து முடக்கி வைப்பதன் மூலம் உலகளாவிய பணவீக்க அழுத்தத்தை ஏற்படுத்தி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதே ஈரானின் உத்தியாகக் கருதப்படுகிறது.
மேலும், “அமெரிக்காவை மீண்டும் ஒரு வெளிநாட்டு போரில் ஈடுபடுத்த மாட்டேன்” என்ற தேர்தல் வாக்குறுதியை ட்ரம்ப் மீறியுள்ளதாக அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் நீண்டகாலம் நீடித்தால் நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் “வெற்றியை அறிவித்துவிட்டு போரிலிருந்து வெளியேறுவது” அமெரிக்காவுக்கு சிறந்த தீர்வாக இருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர் கருதத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக