இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க கிரிக்கெட் ரசிகர்களை பொறுமையுடன் தேசிய அணியை தொடர்ந்து ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு ஐ.சி.சி. உலகக் கோப்பை வெற்றியை இலங்கை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக (Facebook) கணக்கில் வெளியிட்ட பதிவில், 1996 ஆம் ஆண்டு ICC Cricket World Cup வெற்றியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயணத்தை நினைவுகூர்ந்துள்ளார். பல தடவைகள் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியதையும், நான்கு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், உண்மையான ரசிகர்கள் அணியை விட்டு விலகவில்லை என்று மலிங்க சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நிலைத்த ஆதரவும் பொறுமையும் தான் 2014 ஆம் ஆண்டு ICC Cricket World Cup வெற்றிக்கான அடித்தளமாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
2014 வெற்றிக்கு முன் 18 ஆண்டுகள் போராடிய ரசிகர்களின் உறுதியான நம்பிக்கையே அணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வெற்றிக்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அறிவார்ந்த மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்கள் தொடர்ந்து அணியுடன் இருப்பதாகவும், அடுத்த உலகக் கோப்பையை கைப்பற்றும் வரை அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் மலிங்க வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக