2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர (O/L) பரீட்சை இன்று நிறைவடையவுள்ள நிலையில், பரீட்சை மையங்களிலிருந்து மாணவர்கள் அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பரீட்சை முடிவடைந்த நாளில் சில இடங்களில் மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது, பட்டாசு வெடிப்பது அல்லது சாலை மறியல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ள முன்னைய அனுபவங்களை கருத்தில் கொண்டு, இம்முறை முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் பதிவான வன்முறை மற்றும் ஒழுங்கு குலைவு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இவ்வருடம் பரீட்சை நிறைவு நாளில் விசேட காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை மையங்கள் மற்றும் அவற்றைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூடுதல் காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேவையற்ற குழப்பங்களில் ஈடுபடாமல், நேரடியாக வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீது பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பரீட்சை முடிந்த பின்னர் அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பரீட்சை காலத்தின் நிறைவு மகிழ்ச்சியானதாய் இருந்தாலும், அது பொதுமக்களின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது பொலிஸாரின் வலியுறுத்தலாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக