Jaffna – யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாய்” போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிற்காக ஒரு கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான அரச நிதி செலவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
ஒரு நாள் நிகழ்விற்காக இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருப்பது, ஊழல் ஒழிப்பையும் எளிமையான ஆட்சியையும் வாக்குறுதியாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முரண்படுகிறது என பல தரப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
வெளியான தகவல்களின் படி, மண்டப வாடகைக்காக 51 இலட்சம் ரூபாயும், உணவுக்காக 31 இலட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, அரசின் செலவின முன்னுரிமைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு என்ற முக்கிய நோக்கம் இருந்தபோதிலும், அதற்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மாபெரும் தொகையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இச்செலவினங்கள் தொடர்பில் வெளிப்படையான தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும், தேவையற்ற வீண் செலவுகளைத் தவிர்க்க அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக