பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
அந்த சந்திப்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அதிகாரிகள், மேலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் எதிர்காலத்தில் மேலதிக ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். முதற்கட்டமாக 23,000 ஆசிரியர்களை சேவைக்கு இணைத்துக்கொள்வதன் மூலம் தற்போதைய ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும்,
போதிய சுகாதார வசதிகள்
மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள்
அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு
ஆகியவற்றை உடனடியாக மேம்படுத்த அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
தரம் 13 மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் தொழிற்கல்வி கற்கைநெறிகளில் காணப்படும் மொழி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடலில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரசுப் பாடசாலைகளே என்பதை பிரதமர் வலியுறுத்தினார். அவற்றின் பெயரிடல் மாற்றம் மற்றும் மாவட்டக் குழுக்களின் நேரடி கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான விரிவான திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக