பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட நபர் ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி, குறித்த நபர் கத்தி முனையில் முச்சக்கர வண்டி ஒன்றை அதன் உரிமையாளரிடமிருந்து கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து அவரை துரத்திச் சென்ற பொலிஸாரின் சைகைகளைப் பொருட்படுத்தாமல், அரச கடமைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்யும் நோக்கில், களவாடிய முச்சக்கர வண்டியால் மோதியதில் அவர் கடுமையாக காயமடைந்த சம்பவமும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக முதலில் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, நேற்று (17.02.2026) கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூபா 3,50,000 இழப்பீடு வழங்குமாறும், அதை செலுத்தத் தவறினால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், மற்றைய பாதிக்கப்பட்ட நபருக்கு ரூபா 5,00,000 நட்டஈடு வழங்குமாறும், அதனை செலுத்தத் தவறினால் கூடுதலாக 24 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக