இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் வலுவான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து அணிக்காக டிம் செய்பெர்ட் 36 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக டேவன் கான்வே 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் டேர்ல் மிட்செல் ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
216 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 8 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தாலும், ஹர்திக் பாண்டியா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், ஷிவம் தூபே அதிரடியாக விளையாடினார். அவர் 23 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். ரிங்கு சிங் 39 ஓட்டங்கள் எடுத்தார். இருப்பினும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் இந்திய அணி 165 ஓட்டங்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டி முடிந்த பின்னர் தோல்வி குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், உலகக்கிண்ணத்தை முன்னிட்டு வீரர்களை சோதிக்கும் நோக்கில் 6 துடுப்பாட்ட வீரர்களுடன் விளையாடியதாகவும், அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கவே இந்த அணியை களமிறக்கியதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக