2025 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டில் மட்டும் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் குற்றவாளிகளின் முக்கிய இலக்காக இளைஞர் சமூகமும், முதியவர்களும் உள்ளதாகத் தெரிவித்த அவர், அண்மைக் காலமாக இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியவர்களும் இவ்வகை குற்றவாளிகளின் வலையில் சிக்கி வருவதாக கூறினார். குறிப்பாக தொழில்நுட்ப அறிவு குறைவானவர்கள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் புதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக பொதுமக்கள் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கடவுச்சொற்கள், தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் மற்றும் OTP குறியீடுகள் போன்றவற்றை எந்த சந்தேகத்துக்குரிய நபர்களிடமும் வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டார். சிலர் தங்களை பிரபலமான நபர்களாகவோ அல்லது பெயர்பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவோ அறிமுகப்படுத்தி, தொலைபேசி எண்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP குறியீடுகளை பெற்றுக்கொண்டு வங்கி கணக்குகளில் இருந்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடியாக எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “நீங்கள் இலட்சாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்”, “பெரிய லொத்தர் பரிசு வென்றுள்ளீர்கள்” போன்ற செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றும் மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், அந்த பரிசுத் தொகையை பெற சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறி, தனிப்பட்ட தகவல்கள், OTP எண்கள் மற்றும் வங்கி விவரங்களைப் பெற்றுக்கொள்வதே இவர்களின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சில பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை சைபர் குற்றவாளிகளுக்கும் மோசடிக்காரர்களுக்கும் தாரைவார்த்து விடும் நிலை காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். எனவே, சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பெற பொதுமக்கள் அதிக கவனத்துடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டிய அவசியம் தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக