டுபாயிலிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு வாகனங்களுக்கான போலி ஆவணங்கள் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சோதனையில் 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், 5 லொரிகள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகளுக்குச் சொந்தமான போலி பதிவுத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பதிவு எண்களைப் போன்ற போலி வருமானச் சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 5,400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் டுபாய் சுத்தா மற்றும் அவரது சகோதரர், குறித்த வீட்டில் 'ஐஸ்' போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் பொலிஸார் முழுமையான சோதனையை மேற்கொண்டபோது, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி வாகன பதிவுத் தகடுகள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தேவையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நோக்கில் டுபாய் சுத்தா குறித்த போலி ஆவணங்களை அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், குறித்த குற்றவியல் வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் பல தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக