இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் என்ற அளவில் நீடித்தால், இலங்கையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் விலை இந்த ஆண்டு இறுதி வரை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் தொடருமானால், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், எதிர்பாராத வகையில் எண்ணெய் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டால், அது இலங்கைக்கு குறிப்பிடத்தக்க சவாலாக அமையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து, மத்திய வங்கியின் 5 சதவீத பணவீக்க இலக்கை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை தற்போதைய பொருளாதார நிலைமை சாதகமான பாதையில் நகர்வதற்கு பங்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து காணப்பட்டாலும், இறுக்கமான நிதி நிலைமைகள் மற்றும் அதிகரித்த விலைகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் எதிர்பாராத அதிகரிப்பு ஏற்பட்டால், அது இலங்கையின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு சவாலாக அமையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக