இந்தோனேசியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று அதிகாலை 7.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பல அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளுக்குள் செல்வதற்கு அச்சமடைந்து தற்காலிக கூடாரங்களிலும் திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் சுமார் 341 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மேலும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் சவால்கள் உருவாகியுள்ளன.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும், நிலச்சரிவுகள் காரணமாக பல முக்கிய வீதிகள் தடைப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் 36 பேர் தீவிர காயங்களுக்கும், 77 பேர் இலேசான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் சுமார் 3,500 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் குறித்த பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக