இலங்கையில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளுக்குப் பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாக நீண்ட நேரம் பணியாற்றும் போதும் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களும் பாதிக்கப்படக்கூடும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். எனவே, பரீட்சைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பெற்றோர் போதுமான அளவு சுத்தமான குடிநீரை வழங்கி அனுப்ப வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக பரீட்சை மண்டபங்களில் மாணவர்களுக்கு அதிகளவு வியர்வை, மயக்கம், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பரீட்சை நிலையங்களில் போதுமான காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூரிய வெப்பத்தில் நீண்ட நேரம் நேரடியாக இருப்பதைத் தவிர்க்குமாறும், அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பத்துடன் நீண்ட நேரம் இருப்பது இதய நோய் தொடர்பான பாதிப்புகளின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வெப்பநிலை காரணமாக மன அழுத்தம் மற்றும் அதிக கோபம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், வாகனம் செலுத்துபவர்களின் கவனத்தையும் பாதித்து விபத்துகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என மருத்துவர் எச்சரித்துள்ளார்.
எனவே, அதிக வெப்பநிலை நிலவும் காலப்பகுதியில் போதுமான அளவு நீர் அருந்துதல், நேரடியாக சூரிய வெப்பத்தில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனம் செலுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக