இந்தியாவின் தேர்வு முறைகளை மேலும் நம்பகமானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றும் நோக்கில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்ட சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இந்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இவ்வாறான வழக்குகளை விரைவாக விசாரிக்கும் நோக்கில் விசேட நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டப் பிரிவுகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவின் தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை அதிகளவில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்காக சர்வதேச அளவில் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற நந்தன் நிலேகணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்வுகளின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவாக அமுல்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக