கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொகுசு ஜீப் ஒன்று பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பாதுக்க பகுதியில் உள்ள பஹால போப் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த வாகனம், பின்னோக்கிச் செல்லும் கியரில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஜீப்பின் உட்பகுதியில் பல இடங்களில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும், அவற்றின் அடிப்படையில் தடயவியல் மற்றும் கைரேகை பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த ஜீப்பில் பயணித்த மூன்று சீன நாட்டவர்கள் பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கொழும்புப்பிட்டிய நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தப்பிச் சென்றதாகக் கூறப்படும் மூன்று சீன நாட்டவர்களில் இருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற சாரதியும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சீன நாட்டவரின் சடலம் எஹெலியகொட கரந்தான பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் துறையினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக