1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.
நேற்று (23.07.2026) நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கிய இனவெறி வன்முறைகளில் உயிரிழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்திய பங்கேற்பாளர்கள், பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வில் ஈழத் தமிழர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து பங்கேற்றனர். மேலும், நீதிக்கான கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பு ஜூலை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நீதி கோரிக்கையை மீண்டும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த நினைவேந்தல் மற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக