கண்டி மாவட்டத்தின் வத்தேகம – மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்கம் மற்றும் பெருமளவு பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்திருந்த சந்தேகநபர்கள், வத்தேகம பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்தபோது நேற்று பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் 3 கிலோ 930 கிராம் எடையுடைய நான்கு தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, கைப்பற்றப்பட்ட தங்கத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கப் பணத்திற்கு உரிய சட்டபூர்வ ஆவணங்கள் அல்லது உரிமையை நிரூபிக்கும் எந்தவித சான்றுகளும் அவர்களிடம் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால், குறித்த தங்கம் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக இன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக