யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிப்போர் மீது தமது வாகனங்களால் திட்டமிட்டு மோதுதல் மற்றும் வாகனங்களுக்கு முன்னால் ஏற்கனவே உடைந்து போன கையடக்க தொலைபேசிகளை வீசி, அவற்றுக்கு இழப்பீடு தரும்படி கோரி பணத்தினை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வடக்கு மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடலில் ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் புதிய வடிவிலான பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது.
வீதியில் பயணிப்பவர்களின் வாகனத்தின் மீது திட்டமிட்டு மோதிவிட்டு, தமது கைத்தொலைபேசி அல்லது மோட்டார் வாகனம் சேதமடைந்துவிட்டதாகக் கூறி அவர்களிடம் இழப்பீடு கோரிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகிறது.
இத்தகைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதுடன் இது திட்டமிட்ட குழுக்களால் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தபடுகின்றனர் எனவும் தெரிவித்தார் .
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக