தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. படத்தை திரையரங்குகளில் கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும், திரைப்படத்தின் வெளியீடு திடீரென தள்ளிவைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது.
தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தரவில், தனி நீதிபதி வழங்கிய உடனடி சென்சார் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்கான அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கை மீண்டும் தனி நீதிபதி அமர்வில் விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாக, ஜனநாயகன் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயுள்ளது. தொடர்ந்து ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருப்பதால், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தணிக்கை குழு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேவையான மாற்றங்களை செய்து திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 5ஆம் திகதி ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போதைய சட்ட சிக்கல்கள் காரணமாக, அந்த தேதியில் படம் வெளியாகும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக