இலங்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி (Rabies) நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கட்டுநாயக்கவில் நான்கு நாள் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சக பெரேரா, வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்கும் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவரின் கருத்துப்படி, வீதி நாய்களுக்கு உணவளிப்பவர்கள் அவற்றின் உணவு வழங்குவதில் மட்டும் நிற்காமல், அந்த நாய்களின் முழுப் பொறுப்பையும் ஏற்று, தடுப்பூசி செலுத்துதல், உடல்நல பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வெறிநாய்க்கடி நோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் சுமார் 370 ஆக இருந்த உயிரிழப்புகள் தற்போது 14 ஆக குறைந்துள்ளன. இருந்தாலும், இந்த எண்ணிக்கையையும் பூஜ்யமாக்கும் நோக்கில் அரசு புதிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
வெறிநாய்க்கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு நிதி செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி நோயின் மூலத்தையே கட்டுப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை வெறிநாய்க்கடி இல்லாத நாடாக மாற்றுவதே அரசின் முக்கிய இலக்காகும். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும், குறிப்பாக வீதி நாய்களுக்கு உணவளிப்போரின் பொறுப்புணர்வும் மிக அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக