இலங்கையில் வருடந்தோறும் சுமார் 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிள்ளைக்கும் 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், 13 ஆண்டுகள் கல்வி கற்காமல் ஒரு பிள்ளை கூட பாடசாலையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (27) கம்பளையில் நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி, கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முக்கிய ஆயுதம் கல்வி எனக் குறிப்பிட்டார். கிராமப்புற மக்களை தலைமுறை தலைமுறையாக தொடரும் சுழற்சி வறுமையிலிருந்து விடுவிக்க கல்வியில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுவதாகவும், அதற்காக அரசாங்கம் கல்விக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் சுமார் 74 சதவீதமானோர் 10ஆம் வகுப்பு வரை கூட கல்வி கற்காதவர்கள் என்றும், அவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது என்றும் சுட்டிக்காட்டினார். இதனால், சாதாரண தரப் பரீட்சைக்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறும் நிலை கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில், புதிய நடைமுறையாக பிள்ளை பாடசாலைக்கு வரவில்லை என்றால், அதனை உடனடியாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கும் முறை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பிரதேச செயலக மட்டத்தில் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு, ஒரு பிள்ளை தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால் அதற்கான காரணங்கள் நேரடியாக விசாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதன் மூலம் எந்த பிள்ளையும் 13 ஆண்டுகள் கல்வி கற்காமல் பாடசாலையை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக அரசாங்கம் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், பழைய பாடத்திட்டங்களை நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பித்து, கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறினார். 1–5, 6–9, 9–11 மற்றும் 11–13 என்ற நான்கு கட்டங்களின் கீழ் தொடர்ச்சியான கல்வி அமைப்பு உருவாக்கப்படும் என்றும், இந்த மறுசீரமைப்பின் பயனாக 2032ஆம் ஆண்டுக்குள் புதிய தலைமுறை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், 2032ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும் என்றும், இதற்காக சட்ட திருத்தங்கள், விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார். முதல்முறையாக தொழிற்பயிற்சி கல்விக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக சிலர் தவறான கருத்துகளை பரப்ப முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இது பிள்ளைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான தீர்மானம் என்பதால், பொதுமக்களின் முழு நம்பிக்கையுடனும் ஒத்துழைப்புடனும் இதனை முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியம் என கூறினார். முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், 6ஆம் ஆண்டு தொடர்பான மறுசீரமைப்புகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இறுதியாக, நல்ல மனித உறவுகளுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே இந்த கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என்றும், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த மாற்றம் வெற்றியடையும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக