கொழும்பு பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
46 வயதான அவர், பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், சம்பந்தப்பட்ட தொழிலதிபருடன் அவரது வீட்டிற்கு சென்றதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரமாக அவர் எந்தவித பதிலும் அளிக்காததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார பணியாளர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் சார்பில் பிலியந்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சூலாபத்மேந்திர குமாரபத்திரனின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அவரது மரணம் தொடர்பான மேலதிக தகவல்களை கண்டறிய பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அழகுக்கலை துறையில் மட்டுமின்றி, ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப் போட்டிகளுக்கான பயிற்சி வழங்குவதிலும் அவர் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டவராக இருந்ததாக கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அவரது திடீர் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக