மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து திருடப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 22ஆம் திகதி ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது. இதுதொடர்பில் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், களுவாஞ்சிக்குடி பொலிஸார் பாணமை பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய இளைஞர் எனவும், அவர் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டை மாற்றி கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதுடன், குறிப்பாக மோட்டார் சைக்கிள்களுக்கு கென்ரின் பூட்டு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக