இலங்கையின் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்கான சர்வதேச நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து இலங்கையில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களை ஒருங்கிணைத்து வருவதாக புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
கஞ்சிபானி இம்ரான், பல கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு அதி உயர் பாதுகாப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர், போலி பயண ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு இடையே இடமாற்றம் செய்து வருவதாகவும், வெளிநாட்டிலிருந்து இலங்கையில் இடம்பெறும் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை வழிநடத்தி வருவதாகவும் புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸாரின் கோரிக்கையின் பேரில் சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போல், 2024 ஆகஸ்ட் 2 ஆம் தேதி 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் சிவப்பு அறிவித்தல் (Red Notice) வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து தனது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பில் நம்பகமான தகவல்கள் இருப்பின் அவற்றை குற்றப்புலனாய்வு திணைக்களம் அல்லது இன்டர்போல் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக