கண்டி மாவட்டம் தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவவுல பகுதியில் உயிரிழந்த 75 வயது பெண்ணின் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள உரிமைச் சர்ச்சையால், அவரது உடல் கடந்த ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சொத்துகளுக்கு உரிமையாளராக இருந்ததாகக் கூறப்படும் குறித்த பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக நான்கு தரப்பினர் உரிமை கோரி முன்வந்துள்ளனர். எனினும், தங்களுக்கு சட்டபூர்வமான உரிமை இருப்பதை எந்தத் தரப்பினரும் இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை எந்தத் தரப்பினரிடமும் ஒப்படைக்க முடியாது என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
விசாரணைகளில் தெரியவந்த தகவலின்படி, குறித்த பெண்ணுக்குச் சொந்தமான இருமாடி வீட்டின் மேல் தளத்தில் கடந்த 16 ஆண்டுகளாக ஒரு குடும்பம் வசித்து வந்ததுடன், அவர்கள் அந்தப் பெண்ணை அன்புடன் பராமரித்து வந்ததாகவும், பல ஆண்டுகளாக அவரிடம் வாடகை வசூலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற காலத்திலும் அந்தக் குடும்பமே தேவையான உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் எனக் கூறி அவரது சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என தம்மை அறிமுகப்படுத்திய ஒருவர் ஆகியோரும் உடலை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். எனினும், உயிரிழந்த பெண் திருமணம் செய்து கொள்ளாதவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கணவர் எனக் கூறிய நபர் சமர்ப்பித்த திருமணச் சான்றிதழை அதிகாரிகள் பரிசீலித்தபோது, அதில் இடம்பெற்றிருந்த பெயர் உயிரிழந்த பெண்ணுடையதல்ல; அவரது சகோதரியினுடையது என்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமைத் தகராறு காரணமாக இதுவரை பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிமைச் சிக்கலை தீர்க்குமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக