யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி, "உரிமைப்பந்தம்" என்ற தொனிப்பொருளில் அமைதிவழி மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (28) மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கோரிக்கையை மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இந்த போராட்டம் நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள அணையா விளக்குத் திடலில் மாலை 4.30 மணியளவில் போராட்டம் ஆரம்பமானது. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு நீதிக்கான தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற "அணையா விளக்கு" போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த மக்கள் எழுச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செம்மணி பகுதியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், உண்மைகள் மறைக்கப்படாமல் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள், நினைவு பதாகைகள் மற்றும் நீதியை வலியுறுத்தும் வாசகங்கள் ஏந்தப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாக தங்களது உறவுகளின் நிலை குறித்து எந்தத் தெளிவான பதிலும் கிடைக்காத குடும்பங்கள், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய மூன்று அடிப்படை கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆறு முக்கிய கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டு, தடயவியல் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
செம்மணி மண்ணில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான நீதி கிடைக்கும் வரை தங்களது ஜனநாயக ரீதியிலான அமைதிப் போராட்டங்கள் தொடரும் என மக்கள் தெரிவித்ததுடன், இந்த விவகாரம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றுடன் தொடர்புடைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக