மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு கடந்த 26.11.2026 அன்று தவிசாளர் இளையதம்பி திரேசகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், குறித்த வாக்கெடுப்புக்கு முந்தைய தினம் தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை பிரதேசக் கிளைக் கூட்டம் அரசடித்தீவில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வட்டார உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன், கட்சியின் தலைவர் புஷ்பலிங்கம், செயலாளர் நேசதுரை, பொருளாளர் நடராசா மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதன்போது, வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வாக்கெடுப்பின்போது மகிழடித்தீவு வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சியின் பெண் உறுப்பினர் சுலோசனா, தமிழ்த் தேசிய மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தவிசாளர் இளையதம்பி திரேசகுமாரின் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்சியின் தீர்மானத்தை மீறி குறித்த உறுப்பினர் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தமிழரசுக் கட்சியின் ஏனைய வட்டார உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் மகிழடித்தீவு பகுதியைச் சேர்ந்த கட்சியின் செயலாளர் நேசதுரையின் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரே கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக வாக்களித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தமது சொந்த வட்டாரங்களில் வெற்றிபெறாத சிலர், வெற்றிபெற்ற ஏனைய வட்டார உறுப்பினர்களுக்கு கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் அறிவுறுத்துவது எந்த வகையில் பொருத்தமானது எனவும் பட்டிப்பளை பிரதேசக் கிளை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக