அநுராதபுரம் - எப்பாவல, கல்மடுவ பகுதியில் இன்று (27) அதிகாலை பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி உயிரிழக்க காரணமான சந்தேகநபர், வனயானைத் தாக்குதலுக்கு இலக்காகி எப்பாவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் கல்மடுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
ஹிக்குரக்கொட பகுதியிலிருந்து எப்பாவல பகுதிக்கு வந்த நபரொருவரே பெண்ணை கொலை செய்த பின்னர் இன்று அதிகாலை உந்துருளியில் மீண்டும் ஹிக்குரக்கொட நோக்கித் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, எப்பாவல - கெக்கிராவ பகுதியில் வைத்து யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்திருந்த அவரைப் பிரதேசமக்கள் ஒன்றிணைந்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையின் ஊடாகச் சிகிச்சைக்காக எப்பாவல மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், எப்பாவல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக