பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (25.11.2026) பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தையொட்டி செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செம்மஞ்சள் நிற ஆடையில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நிலையில், அவரது ஆடையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, நீங்கள் அழகாக ஆடை அணிந்து வந்திருக்கிறீர்கள்” என சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், அவர்களுக்கு ஆதரவாக செம்மஞ்சள் நிற ஆடையை அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டின் தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
பெண்களை வலுவூட்டுதல், அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக