இத்தாலியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவிட்டு, குறுகிய கால விடுமுறைக்காக இலங்கை திரும்பிய நபரிடமிருந்து சுமார் 40 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இத்தாலியில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக இலங்கை வந்திருந்த இவர், அண்மையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் கலந்துகொண்டபோது, சந்தேகத்திற்குரிய பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த மாதம் 15-ஆம் திகதி குறித்த பெண்ணுடன் வென்னப்புவவிலுள்ள தங்குமிடம் (லொட்ஜ்) ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அங்கு சென்றதும் அப்பெண் முதலில் குளியலறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளார்.
பின்னர், குறித்த நபர் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பதக்கத்தையும் கழற்றித் தனது காற்சட்டைப் பையில் வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றுள்ளார்.
அவர் குளியலறையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, அறையிலிருந்த பெண் மாயமாகியிருந்தார். அங்கிருந்த பணியாளரிடம் விசாரித்தபோது, அப்பெண் அறையை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உடனடியாகத் தனது காற்சட்டைப் பையைச் சோதனையிட்டபோது, 40.75 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பதக்கம் திருடப்பட்டிருந்தமை தெரியவந்தது.
அப்பெண்ணின் தொலைபேசிக்குப் பலமுறை அழைப்பு விடுத்தும் பதில் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட நபர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீர்கொழும்பு - கட்டான பகுதியிலுள்ள தங்குமிடம் ஒன்றில் மறைந்திருந்த 26 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்தனர்.
வென்னப்புவ - பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த இவர், தற்போது மாரவில - வடிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வருபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில், திருடப்பட்ட தங்கச் சங்கிலியையும் பதக்கத்தையும் அடகு நிலையம் ஒன்றில் அடகு வைத்துள்ளதாகச் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிலாபம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் பெரேரா மற்றும் வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசல புல்வன்சா ஆகியோரின் வழிகாட்டுதலில், வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதம பொலிஸ் பரிசோதகர் என்.ஜே. அதுகோரள மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஷேஷன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக