கொழும்பு கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்குச் சென்று, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய சந்தேகநபர், நேற்று (23) கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 2,800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தரும் நகைக்கடைகளையே சந்தேகநபர் இலக்கு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் மற்றும் இம்மாதம் பல சந்தர்ப்பங்களில் குறித்த நகைக்கடைகளுக்குச் சென்ற அவர், தன்னை ஆங்கிலப் பிரஜை என அறிமுகப்படுத்தி, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி அவற்றைப் பார்வையிடும் போர்வையில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் இலங்கையர் என்பதும், அவரது தாயார் ஆங்கிலப் பிரஜை என்பதும் தெரியவந்துள்ளது. 37 வயதுடைய சந்தேகநபர், கட்டுகஸ்தோட்டை மாப்பானாவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கல்கிசையில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகளை செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்ய முயன்றபோது சந்தெக நபரை கைது செய்த பொலிஸார், நகைகளையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட நகைகளில் 68 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட ரோஸ் கோல்ட் மோதிரம் மற்றும் இளஞ்சிவப்பு நிற நீலக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஆகியவையும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக