கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் கேரளா மற்றும் தமிழ்நாடு இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறினார். குறிப்பாக, இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், கேரள அரசின் பிராண்ட் தூதரான நடிகர் மோகன்லாலும், முதலமைச்சர் விஜயும் இணைந்து கேரளத்தில் நடைபெறவுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிகழ்ச்சிக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பிரச்சினை அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சவாலாக இருப்பதால், கேரளா மற்றும் தமிழ்நாடு இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், தென்னிந்திய மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து மத்திய அரசுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.
அத்துடன், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தகவல்களை கேட்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக