லித்துவேனியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை லித்துவேனியா பரப்பி வருவதாகவும், அதன் மூலம் நாட்டை மேலும் இராணுவமயமாக்க முயற்சிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு முன்னர், லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள் நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இவ்வாறான தகவல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி நாட்டை இராணுவமயமாக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் அரசியல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளை காரணமாகக் கொண்டு பால்டிக் நாடுகளில் நேட்டோ அமைப்பின் இராணுவ உள்கட்டமைப்புகளை தொடர்ந்து விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்காக ரஷ்யாவை எதிரி நாடாக சித்தரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக