மியன்மாரில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அந்நாட்டு இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் அமைப்புகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ தெரிவித்துள்ளார்.
மோதலுக்கு இராணுவ ரீதியில் நிரந்தரத் தீர்வு காண முடியாது என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், நீண்டகாலமாக தேக்கமடைந்திருந்த அமைதி முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க ஏதுவான சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து நாட்டில் கடுமையான உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இந்த மோதல்களில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் சர்வதேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தேவையான வசதிகள், பேச்சுவார்த்தைக்கான இடம் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கத் தாய்லாந்து தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
மியன்மாரில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் ஆசியான் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதரான பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா தெரசா லாசரோ மற்றும் தாய்லாந்து அதிகாரிகள், மியன்மார் இராணுவ ஆதரவு பெற்ற தேசிய ஒற்றுமை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக