நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் இன்று (13.07.2026) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாடசாலை பரீட்சை நிறைவடைந்த பின்னர், நண்பர்களுடன் இணைந்து ஆற்றில் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக மாணவன் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரின் வேகமான ஓட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். மேலும், சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக