யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை மாவட்டத்தில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், ஆனால் நாட்டின் தென்பகுதி மற்றும் பல மாகாணங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதன் தாக்கம் தற்போது யாழ்ப்பாணத்திலும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவரது தகவலின்படி, ஜூலை மாதத்தின் முதல் ஏழு நாட்களிலேயே 65 புதிய டெங்கு நோயாளர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது டெங்கு பரவலில் திடீர் அதிகரிப்பை காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேல் மாகாணம், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், அங்கு கல்வி மற்றும் தொழில் காரணங்களுக்காக தங்கியிருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பும் போது டெங்கு தொற்றுடன் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தொற்றுடன் வருபவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பொதுமக்கள் டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு பெருக்கம் ஏற்படும் இடங்களை அகற்றுவதில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக