நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் திடீரென நிகழ்ந்த ஒன்று அல்ல என்றும், நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் விளைவாக இருக்கலாம் என்ற கோணத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, சிறைச்சாலைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாதாள உலகக் குழுக்களின் தொடர்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, துபாயில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் சில பாதாள உலக தலைவர்களின் தொடர்பும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது சிறைச்சாலையின் பாதுகாப்பு அமைப்புகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும், தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட உடல் ஸ்கேனர்கள் மற்றும் கண்காணிப்பு கமெராக்களின் பதிவுக் கருவிகள் அழிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆதாரங்களை மறைக்கும் நோக்கில் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், சிறைக்குள் இருந்த சில கைதிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதாகக் கருதப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்த நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மோதலின் போது கைதிகள் இரும்புக் கம்பிகள், கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதுடன், பின்னர் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் பதிவாகியுள்ளது. அதி பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலைக்குள் இவ்வாறான ஆயுதங்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பிலும் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், சில கைதிகள் உறவினர்களைச் சந்திக்க அனுமதி கோரியதாகவும், அதன்பின்னர் உள்ளே சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டு பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கச் சென்ற பாதுகாப்பு தரப்பினர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறியும் நோக்கில் விசாரணைகள் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் விசேட விசாரணைக் குழு நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆதாரங்களை சேகரித்து விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அத்துடன், உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக