அம்பாறை மாவட்டத்தின் உகண பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் திட்டமிட்ட மாறுவேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, உகண – 21, திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து சந்தேகநபர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் படி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்தே அவர் தனது போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை இயக்கி வந்துள்ளார். வீட்டைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்கள் மற்றும் ஒளிவிளக்குகள் மூலம் பொலிஸாரின் நடமாட்டத்தை கண்காணித்து, சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் முன்பே தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ், பொலிஸார் "டெங்கு ஒழிப்புப் பரிசோதகர்கள்" என மாறுவேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர். குழுவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் சுற்றுப்புறத்தை பரிசோதிப்பதாகக் கூறி நடவடிக்கை மேற்கொண்டபோது, சந்தேகநபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கவனத்தை திசைதிருப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்படும் தருணத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முயன்றதாகவும், அந்த முயற்சியை பொலிஸார் நிராகரித்து சட்ட நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 30 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் அம்பாறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக