நம்மில் பலர் காலையை ஒரு கப் பிளாக் காபியுடன் தொடங்குவது வழக்கம். சிலர் உடல் எடை குறைப்பதற்காகவும், மற்றவர்கள் சுறுசுறுப்பை அதிகரிப்பதற்காகவும் பிளாக் காபியை தினசரி அருந்துகின்றனர். ஆனால், பிளாக் காபியை எந்த நேரத்தில் குடித்தால் அதிக நன்மை கிடைக்கும் என்பது குறித்து பலருக்கும் தெளிவான அறிவில்லை.
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது சிறந்த பழக்கமாக கருதப்படுவதில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் உடலில் கார்டிசோல் எனப்படும் ஹார்மோனின் அளவு இயல்பாகவே அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோன் உடலை விழிப்புடன் வைத்திருக்க உதவுவதால், அப்போது காபி குடிப்பது அதன் இயற்கை செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.
மேலும், வெறும் வயிற்றில் காபி அருந்துவது சிலருக்கு அமிலத்தன்மை, வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனால் காலையில் எழுந்த உடனேயே காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஆய்வுகளின்படி, காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பிளாக் காபி அருந்துவது சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உடலின் கார்டிசோல் அளவு குறையத் தொடங்குவதால், காபியில் உள்ள கஃபைன் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை குறைக்க உதவுகிறது.
அதேபோல், மதிய உணவுக்குப் பிறகு ஏற்படும் மந்தநிலையை போக்கவும் ஒரு கப் பிளாக் காபி பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சிக்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு பிளாக் காபி அருந்தினால், வளர்சிதை மாற்றம் அதிகரித்து கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்க உதவும் என கூறப்படுகிறது.
அளவோடு மற்றும் சரியான நேரத்தில் பிளாக் காபி அருந்தினால், உடல் புத்துணர்ச்சி, கவனச்சேர்ப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு ஆரோக்கியமான பானமாக அது அமையும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக