இலங்கை மத்திய வங்கி தனது ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (100 basis points) அதிகரித்து, 8.75% ஆக நிர்ணயிப்பதற்கு அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளது. நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவாலான சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாகப் பரிசீலித்த பின்னரே, சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில் நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இவ்வருட மார்ச் மாதத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கை ஆய்வின் போது, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75% ஆக எவ்வித மாற்றமும் இன்றிப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வட்டி வீத அதிகரிப்பு சந்தை வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கக் கட்டுப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக