ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியில் விராட் கோலி 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மைதானத்தில் நடந்த 'இம்பாக்ட் சப்' கிண்டல்:
போட்டியின் போது வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில், ஸ்லிப் திசையில் நின்றிருந்த டிராவிஸ் ஹெட்டிடம் விராட் கோலி சில வார்த்தைகளைக் கூறி வம்பிழுத்துள்ளார். குறிப்பாக, டிராவிஸ் ஹெட் பெரும்பாலும் பேட்டிங் மட்டும் செய்துவிட்டு, பீல்டிங்கின் போது 'இம்பாக்ட் சப்' (Impact Sub) விதியின் கீழ் மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி, பந்துவீச வருமாறு சைகை காட்டி கோலி அவரைக் கிண்டல் செய்துள்ளார்.
கைகுலுக்க மறுத்த கோலி
மைதானத்தில் ஏற்பட்ட இந்த மோதல் போட்டியுடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் நிறைவடைந்ததும் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ள வரிசையாக வந்தனர். அப்போது மற்ற அனைத்து ஹைதராபாத் வீரர்களுக்கும் கைகொடுத்த விராட் கோலி, தனக்காகக் கையை நீட்டி நின்ற டிராவிஸ் ஹெட்டை வேண்டுமென்றே முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அவரைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன டிராவிஸ் ஹெட், பின்னர் அமைதியாக நகர்ந்து சென்றார். கோலியின் இந்தத் துவேஷமான செயல் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆர்சிபி
இப்போட்டியில் ஆர்சிபி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையில் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளும் தலா 18 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருந்தாலும், ரன் ரேட் சாதகமாக உள்ளதால் ஆர்சிபி அணி நேரடியாக முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு (Qualifier 1) முன்னேறியுள்ளது. இதற்கிடையே, பிளே ஆஃப் சுற்றின் 4-வது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தீவிரமாகக் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக