திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, குழந்தை இல்லை என்று சிகிச்சைக்கு வந்த 19 வயது இளம் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலி மருத்துவர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருத்தணியை அடுத்த சின்ன நாகப்பூண்டி கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்த 52 வயதான பாஸ்கர் என்ற நபர், நீண்ட நாட்களாக உள்ளூர் மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, தாமினேரி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் இந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, பரிசோதனை என்ற பெயரில் அந்தப் பெண்ணைத் தனி அறைக்கு அழைத்துச் சென்ற பாஸ்கர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி அந்தப் பெண் அறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். உடனடியாக அவரது கணவர் அவரை மீட்டு, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில்தான், பாஸ்கர் ஒரு போலி மருத்துவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர் ஆயுர்வேத மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு, தன்னை ஒரு எம்.பி.பி.எஸ் (MBBS) மருத்துவர் என்று பொய் கூறி, அலோபதி (ஆங்கில) மருத்துவச் சிகிச்சை அளித்து பொதுமக்களின் உயிருடன் விளையாடி வந்துள்ளார். மற்ற மருத்துவர்களைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவாகக் கட்டணம் வாங்கியதால், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் பலரும் இவரை நம்பி சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர்.
தற்போது பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவரிடம் சிகிச்சை பெற்று வேறு யாருக்கேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா? மற்றும் இவரால் வேறு பெண்கள் எவரேனும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக