அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், டொலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பணப் பரிமாற்றத்தைக் குறைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டொலரின் மதிப்பு உயரும் எனக் காத்துக்கொண்டிருக்காமல், தங்களிடமுள்ள டொலர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், "சந்தையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி யாராவது நுகர்வோரைச் சுரண்ட முற்பட்டால், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என்று எச்சரித்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை குறித்துச் சிலர் தவறான பகுப்பாய்வுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாளை அல்லது மறுநாள் விலை கூடும் என டொலர்களைத் தேக்கி வைக்கத் தேவையில்லை என்றும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தங்களது டொலர்களை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் டொலர்களை நாட்டிற்குள் கொண்டு வருமாறும், ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர்களை உடனடியாக ரூபாயாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு செய்யத் தவறினால், இந்த நெருக்கடியின் நேரடிப் பாதிப்புக்கு அவர்களே உள்ளாக நேரிடும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் எச்சரித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக