காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட தென் பகுதி மாவட்டங்களிலிருந்து பலர் கண் நோய் தொடர்பான சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு பெருமளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் நோயியல் பிரிவிற்கு கூடுதல் வசதிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தென்பகுதிகளில் வசிக்கும் சில நோயாளர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், நாட்டின் பல பகுதிகளில் கண் வெண்திறை (Cataract) நீக்க சிகிச்சைகளுக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களில் தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் வெண்திறை தொடர்பான சத்திரசிகிச்சைகள் முறையாகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கண் நோயியல் விசேட நிபுணர் டாக்டர் எஸ். மலரவன் தலைமையிலான மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி வருவதாக தென்பகுதியில் இருந்து வரும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தென்பகுதிகளில் கண் நோய் சிகிச்சைகள் அதிக செலவில் வழங்கப்படுகின்றன என்றும், ஆனால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்த சிகிச்சைகள் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிகரித்து வரும் நோயாளர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் நோயியல் பிரிவிற்கு தென்பகுதிகளுக்கு வழங்கப்படும் அளவிலான வசதிகள் மற்றும் மருத்துவ வளங்களை அதிகரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக