டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, இன்று (05) நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மாதம் 23ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த நாள் (24) சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்திற்கு அங்கு பணியாற்றும் மூன்று ஊழியர்கள் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியிருக்கலாம் என வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் வெளியாகியதையடுத்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியும் கண்டனங்களும் எழுந்துள்ளன.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பல நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எவ்வித சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (03) வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
எனினும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இன்று (05) நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தன்னெழுச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, வெளி ஓயா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா, கந்தப்பளை, கொத்மலை மற்றும் இரம்பொடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருந்திரளான இளைஞர்-யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஊழியர்களையும் உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும், அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இவ்வாறான மனிதாபிமானமற்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக