தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே பயன்படுத்தியதாக பொலிஸார் மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி கைது செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு தவிசாளர் ஆகியோர் மறுநாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் வலி. கிழக்கு தவிசாளர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், மார்ச் 3ஆம் திகதி முறைப்பாட்டாளரும் பொலிஸாரும் முன்னிலையாக விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது, விகாரைக்கு சிங்கள மக்கள் வந்திருந்ததால் போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கவே கைது செய்ததாகவும், கைது செய்யும் போது குறைந்தளவு பலத்தை மட்டுமே பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடி கைது செய்ததுடன், தடைக்கு அப்பால் இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தி வாகனத்தில் ஏற்றியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அதன் பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக இந்த விவகாரம் கொழும்பு அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக